Tuesday 25 March 2014

பா.ஜ.க.அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம்- மூவர் குழு சுமந்திரன்

இந்தியாவில் பாஜக அரசு அமைந்தால் இணைந்து செயற்படுவோம் –
எம்.ஏ.சுமந்திரன்
[ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 09:11 GMT ] [ கார்வண்ணன் ]

ஐ.நாவுடன் முரண்போக்கைக் கடைப்பிடிக்காமல், ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை சிறிலங்கா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் கூறியுள்ளதாவது.

கேள்வி - ஜெனிவாவில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானத்தை தாம்
நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெளிவாக கூறியுள்ள நிலையில், போருக்குப் பிந்திய சூழல் தொடர்பாக, அனைத்துலக
சமூகத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தியைக் கூறவுள்ளது?

பதில் - சிறிலங்கா அரசாங்கத்துக்கு பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் என்ற வகையில், இத்தகைய
தீர்மானங்களால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதே 2012ம் ஆண்டு தொடக்கம், எமது நிலைப்பாடு. தீர்மானத்தில் அவர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்து சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்தநிலையில், இந்த தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளும் படியும். ஐ.நாவுடன்
முரண்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்றும் சிறிலங்கா அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும்.

கேள்வி- அமெரிக்க தீர்மான வரைவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
பாராட்டியுள்ளது. தற்போதைய வரைவு இன்றும் வலுவானதாக இருக்க வேண்டும் என்று கூட்டமைப்பு உணரவில்லையா?

பதில் - நாம், சரியான நல்லிணக்கம், பொறுப்புக்கூறும் செயல்முறை இருக்க
வேண்டும் என்று கூறி வருகிறோம். உண்மையை அறியாமல், நல்லிணக்கத்தை அடைய முடியாது.அதனால், உண்மை கண்டறியும் பொறிமுறை அவசியமானது. சிறிலங்கா விடயத்தில், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை, அனைத்துலக விசாரணையால் மட்டுமே சாத்தியமாகும். சுதந்திரமான விசாரணையை முன்னெடுப்பதற்கு ஒரு அனைத்துலக விசாரணை அவசியம். அதற்கு ஒரு அனைத்துலக ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும்.

கேள்வி- அண்மையில் வடக்கு மாகாணசபைக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர்கள், சிறிலங்கா அதிபருடன், அரசியல்தீர்வு தொடர்பாக எந்த நிபந்தனையுமின்றி பேச்சு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. சிறிலங்கா அதிபருடன் பேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனரா?

பதில்- நாங்கள் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிக்கத் தயார். ஆனால்.
கலந்துரையாடலுக்கு அரசாங்கம் முன்வரவில்லை. கடைசி மூன்று அமர்வுகளின் போதும், 2011இல் சிறிலங்காஅதிபருக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டை மீறி, அரசாங்கத் தரப்புக் குழுவினர் பேச்சுக்களில் இருந்து வெளியேறினர். அதேநிலை தான் இப்போதும் தொடர்கிறது.

கேள்வி - வடக்கில் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதாக ஐ.நா
மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. அதுபற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிந்துள்ளதா, வடக்கில் புலிகள் ஒருங்கிணைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமா?

பதில் - இல்லவே இல்லை, கடந்த ஐந்து ஆண்டுகளில், விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவது பற்றிய எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.
போர் முடிவுக்கு வந்த பின்னர், ஒரு சிறிய மோதலோ, வன்முறைச் சம்பவமோ நிகழவில்லை. இப்போது, அரசாங்கத்துக்கு அனைத்துலக அழுத்தங்கள் வருகின்ற நிலையில், வடக்கில் தொடர்ந்து இராணுவம் நிலைகொண்டிருப்பதை நியாயப்படுத்துவதற்கு, இத்தகைய கதைகள் தேவைப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்முறைகளுக்கு ஆதரவு வழங்காது. வன்முறைகள் மீண்டும் ஏற்பட்டால், தமிழர்களாகிய நாம் பாதிக்கப்பட நேரிடும்.

கேள்வி- தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைய முடியும் என்கிறது
சிறிலங்கா இராணுவம், ஆனால், இந்தப் பெண்கள், பலவந்தமாக படையில்
சேர்க்கப்படுவதாக சில அரசியல்கட்சிகள் கூறுகின்றன. இராணுவத்தில்
தமிழ்ப்பெண்கள் இணைவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கிறதா?

பதில் - இந்த ஆட்சேர்ப்பு ஒழுங்குமுறையற்ற செயல்முறையாகும்.
இராணுவத்தில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், ஆண்களைச் சேர்க்காமல், பெண்கள் மட்டும் ஏன் சேர்க்கப்படுகிறார்கள்?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றிய பல குற்றச்சாட்டுகள்
உள்ளன. இந்தநிலையில் ஆண்களைச் சேர்க்காமல், பெண்களை மட்டும்
படையில் சேர்ப்பதற்கு ஏன் அரசாங்கம் முயற்சிக்கிறது?

கேள்வி - தமிழர்களுக்கு தனிநாடு அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அழுத்தம் கொடுக்கிறதா?

பதில் - இல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு நன்றாக அறிந்த ஒன்று. பிரிக்கப்படாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் ஒரு தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம்.அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின் மூலம் நல்லிணக்கத்தை எட்டவே விரும்புகிறோம். 

கேள்வி- சிறிலங்கா அரசியல் விவகாரத்தில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்
எத்தகைய பங்கை வகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எதிர்பார்க்கிறது?

பதில் - எமது நிலையை பாதுகாப்பதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின்
ஆதரவு எமக்குத் தேவை. நாம் அனைவரும், சுயமரியாதை மற்றும், கௌரவமாக வாழ்வதற்கு எமக்கு அவர்கள் ஆதரவு அளித்து வந்துள்ளனர்.
நாம் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ முடியாது.

கேள்வி - இந்தியாவில் பாஜக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறதா?

பதில் - பாஜக ஆட்சி அமைத்தால், நாம் அவர்களுடன் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து பணியாற்றும். இது இந்தியாவில் மட்டுமன்றி, உலகின் எந்த நாட்டில் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், அதுவே எது நிலைப்பாடு.

நன்றி:புதினப்பலகை அழுத்தம் நமது.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...