Monday 13 October 2014

ஜனாதிபதித் தேர்தல்: முடிவுகள் எடுக்காத கூட்டமைப்பு!


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எவ்விதமான முடிவுகளும் கூட்டமைப்பு இதுவரையில் மேற்கொள்ளவில்லை- சம்பந்தன்


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எவ்விதமான முடிவுகளும் கூட்டமைப்பு இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., உரிய காலத்தில் மக்கள் கருத்துக்களைப் பெற்று அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது என்று அரசின் நம்பகரமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ச, தான் மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.

மறுபுறத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும், அதற்கான ஆலோசனையை நீதிமன்றிடம் பெறமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, 2016ம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதால் நாட்டில் சர்வாதிகார ஆட்சியே
ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளதோடு ஏனைய கட்சிகளை பொது அணியில் ஒன்றிணைக்கும் முனைப்புக்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறிப்பாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர், ரணில் விக்கிரசிங்க பொதுவேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் ஆட்சேபனை இல்லையெனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஆகியோரும் பிரத்தியேக சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

மேலும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே தவிர பொதுவேட்பாளர் அல்லர் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆளும், எதிர்த் தரப்புக்களின் இவ்வாறான நிலைப்பாடுகளுக்கும் நகர்வுகளுக்கும் மத்தியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஜனாதிபதித் தேர்தல் குறித்த உத்தியோக அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. அவ்வாறிருக்கையில் நாம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் எவ்விதமான முடிவுகளையும் எடுக்கவில்லை.

எனினும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாம் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறவுள்ளோம். அத்தோடு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக உத்தியோபூர்வமான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.

இதற்காக கூட்டமைப்பு விசேட கலந்துரையாடலையும் மேற்கொள்ளும். எவ்வாறாயினும் எமது இறுதி முடிவு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என்பதுடன் தமிழ் மக்களின் நலன்களையும் எதிர்காலத்தையும் பாதிக்காதவாறு அது அமைந்திருக்கும்.

குறிப்பாக தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் காணப்படும் தற்போதைய நிலைமைகள், இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு தொடர்பில் அதிகூடிய கவனத்தையும் கருத்தில் கொண்டதாக எமது இறுதி முடிவு அமையும்" - என்று கூறியுள்ளார் சம்பந்தன் எம்.பி.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...