Monday 11 April 2016

வெற்றிச் செல்வி நிமிடக்கதை

வெற்றிச் செல்வி நிமிடக் கதை

நிமிடக்கதை 
லையரசி துயரத்தோடு இருந்தாள். பிரிவுகளின் வலியெல்லாம் சேர்ந்து இதயத்தில் ஒருசேர இறங்கியிருப்பதாய் உணர்வு. திசைகளெங்கும் சிதறிப்போன நண்பர்களின் ஒற்றை வார்த்தைக்காய் தவமிருந்தாள்.

கார்த்திகை மலர்கள் சொரிந்துகிடக்கும் ஒற்றையடிப்பாதையிலே நடந்துசெல்வது அவளுக்கு ஆனந்தமாய் இருக்கவில்லை. இல்லையில்லை ஆனந்தமாய்த்தான் இருந்தது. இல்லை அப்படியில்லை. அவளுக்கு அந்த உணர்வை........

வீட்டுக்குப் போகும்வழியை மேவிப் பாய்ந்த வெள்ளத்தில் தடக்கி விழுந்தாள். சேற்றுக்குழி அவளின் பாதத்தை இழுத்துப் பிடித்தது. பறித்து எடுத்ததில் முன்பே உடைந்திருந்த கால் எலும்பில் மீண்டும் வலி. முன்போன்று தாங்குவதற்குத் தோழியரில் எவரும் அருகிலில்லை. ஆற்றாமையோடு நடந்தாள்.

வீட்டினுள்ளேயும் சிந்திக்கொண்டிருந்தது மழை.

நனைந்துகொண்டிருக்கும் பொருட்களை இடம்மாற்றி நகர்த்தினாள். அவசரப்படுத்தியபடி அழைத்துக் கொண்டிருக்கும் அந்த இலக்கத்துடன் கதைக்கப் பிடிக்கவில்லை. என்றாலும் அவள் கதைக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக இருந்தது. மறுக்க முடியாத மனதோடு தொடர்பை ஏற்படுத்தினாள்.

வணக்கம் சொல்லும்போது வலியச்சிரித்த வார்த்தைகள் தொடர்ந்து பேசமுடியாமல் முரண்டு பிடிக்கின்றன. காலில் வலிக்கிறது. மழைச் சத்தம் இனிக்கவில்லை என்ற உணர்வே கசக்கிறது. ஆற்றாமையோடு துயரம் கண்களில் வழிகிறது. இதயம் கசிகிறது.

இல்லை. நீங்கள் கலங்கமுடியாது. அரசியே கலங்கினால்??? அவர்களது வார்த்தைகளில் திருப்தியின்மை. தொடர்பு அறுந்தது.

அரசிக்கு வலிக்காதா? அரசிக்கு பசிக்காதா? அரசிக்குக் குளிராதா? அரசிக்கு கண்ணீரில்லையா? அரசி மட்டும் ஏன் அழக்கூடாது?

ஏனெனில், 'அந்த' மிடுக்கிற்கு எந்தக் குறைவுமற்று எல்லா வலிகளையும் தாங்கியபடி பிறரின் நம்பிக்கைக்கும் ஊன்றுகோலாக நிற்கவேண்டியவள். 

அவள் வார்த்தைகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் கலங்கக்கூடாது.

வெற்றிச்செல்வி
12.05 பி.பகல்
15.11.2015

No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...